14 காற்றாலைகளையும் அமைப்பதில் அரசு உறுதி ஆனால் ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் எதனையும் தாம் செய்யவில்லை என்கிறார் மன்னார் ஆயர்.

“மன்னாரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் முடிந்த முடிவாக உள்ளது. ஆனால் நான் அங்கு ஜனாதிபதியுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.”

இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

“ஜனாதிபதியைச் சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினேன். எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு அந்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்பதே. அதில் அவர்கள் மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.” – என்றும் மன்னார் ஆயர் மேலும் கூறினார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை மாலை சர்வமதக் குழு, பொது அமைப்புக்கள், போராட்டக் குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“நான் ஜனாதிபதியைச் சந்தித்தேன். இதன்போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சினையை அவரிடம் முன்வைத்தேன். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நான் அரச அதிபரோடு இணைந்து இந்து மற்றும் இஸ்லாமிய மத குருக்களையும் அழைத்துச் செல்வதாக இருந்தோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் ஜனாதிபதியை மூன்றாவது தடவையாகச் சந்தித்தேன். முதல் தடவையாகத் தனியாகவும், இரண்டாவது தடவையாக ஆயர் மன்றத்துடன் இணைந்து சென்று சந்தித்தோம்.

இந்தப் பிரச்சினையை நான் இலங்கை ஆயர் மன்றத்துக்கும் எடுத்துச் சொன்னேன். இலங்கை ஆயர் மன்றம் எங்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். கர்தினால், ஆயர் மன்றத் தலைவர் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்ட சந்திப்புக்கும் சென்றேன்.

இறுதியாக கடந்த 2 தினங்களுக்கு முன் ஜனாதிபதியைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அனைவரோடும் இணைந்து செல்வதாக இருந்தும் அந்தச் செயற்பாடு எனக்குக் கைகொடுக்கவில்லை.

இருந்தும் நான் தனியாகச் சென்று இந்த விடயம் குறித்துக் கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் அந்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.

நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் எங்களுடைய மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகின்றார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினேன்.

எனினும் ஜனாதிபதியினுடைய நிலைப்பாடு என்னவென்றால் அந்த 14 காற்றாலைகளையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

கனிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தித் தருவதாகவும், குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்தவோர் அரசாங்கமும் இந்தச் சிறிய தீவில் கனிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும், அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.

எது, எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களைச் சந்தித்ததன் பிற்பாடு இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை.

எனினும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இணைய ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. தாங்களாகவே ஊகித்து வெளியிட்ட செய்திகளாக அவை அமைந்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுடனும், மக்களுடனும் இன்னும் கலந்துரையாட வேண்டியுள்ளது. அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.