காகிதத் தாள்களே கையளிப்பு! விளம்பரத்துக்காகவே நிகழ்வு!! – மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம் என்றும் ஜீவன் ஆவேசம்.
அநுர அரசால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அரசால் வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்த நிகழ்வானது 2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல. ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே.
இந்தக் காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை. கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையகச் சமூகத்துக்காக எந்தவொரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.
குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை.” – என்றுள்ளது.
