8 கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு! சி.சி.ரி.வி. கமரா ஊடாக மூவர் கைது!!

அக்குறணையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேகநபர்கள் மூவர் சி.சி.ரி.வி. கமராவின் ஊடாகக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டிக்காக மாத்தளை பிரதேசத்தில் இருந்து சென்ற அணியினர் தமது கையடக்கத் தொலைபேசிகளை ஒரு பையில் இட்டு, தாம் பயணித்த ஓட்டோ ஒன்றில் வைத்தனர்.

போட்டி முடிந்து அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தபோது கையடக்கத் தொலைபேசி வைக்கப்பட்டிருந்த பை அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

திருடப்பட்ட பையில் 8 கையடக்கத் தொலைபேசிகள் இருந்தன என்றும், அவற்றின் பெறுமதி 5 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்றும் தெரியவந்தது.

பின்னர், அவர்கள் இவ்விடயமாக அளவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததன் அடிப்படையில் பொலிஸார் சி.சி.ரி.வி. காட்சிகளைப் பரிசீலித்தனர்.

அதன்படி ஒரு சந்தேகநபரை அடையாளம் கண்டு விசாரித்ததில், அதில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை 8 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தமை தெரியவந்தது.

மேலும் சந்தேகநபரிடம் தொடர்ந்த விசாரணைகளுக்கமைய, இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மூவருமாக அந்தப் பணத்துக்குக் ஹெரோயின் போதைப்பொருளைக் கொள்வனவு செய்தமை தெரியவந்தது.

சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கிரிக்கெட் போட்டி அக்குறணை 7ஆம் கட்டை பிரதேச மைதானம் ஒன்றில் இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.