நெடுந்தீவு படகு சேவை: நேர ஒழுங்கில் மாற்றம்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தன்மையால் குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கிடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நெடுந்தீவு பிரதேச செயலர் என்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் நாளைமறுதினம் வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது நிலவும் காலநிலையில் விரைவாக இருட்டுவதனால், படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம். அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும் படகு , வியாழக்கிழமை முதல் 30 நிமிடங்கள் முன்னதாக 3 மணிக்கு புறப்படும். அதேபோன்று குறிகாட்டுவானில் இருந்து , மாலை 5 மணிக்கு புறப்பட்ட படகு இனி மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
அதேவேளை, ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்குப் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, காலையில் நீண்ட நேரம் குறிகாட்டுவானில் படகுக்குக் காத்திருப்பதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு , குறிகாட்டுவான் சென்று மீண்டும் காலை 8 மணிக்குக் குறிகாட்டுவானில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும்.” – என்றார்.
இதேவேளை, குமுதினி படகின் நேர ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
