பத்து வருடங்களுக்குப் பிறகு தாய் வீடு சென்ற நாமல் எம்.பி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷ எம்.பி. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு நேற்று சென்றிருந்தார்.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காகவே நாமல் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இவ்வாறு சு.க.வின் தலைமையகம் சென்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்தான் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டீ.ஏ. ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாகவே ராஜபக்ஷக்களின் அரசியல் பயணம் தென்னிலங்கையில் கோலோச்சியது.

மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சு.க. ஊடாகவே நாடாளுமன்றம் பிரவேசித்தனர்.

எனினும், 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மைத்திரி வசமானது. அதன்பின்னர் ராஜபக்ஷக்கள் இணைந்து புதிய கட்சியை ஆரம்பித்தனர்.

சுமார் 10 வருடங்கள் அவர்கள் சு.கவின் தலைமையகம் செல்லவில்லை. இந்நிலையிலேயே நேற்று நாமல் ராஜபக்ஷ சென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.