ஆலய வழிபாட்டுக்காக அர்ச்சனைப் பொருட்களுடன் மோ. சைக்கிளில் மகளுடன் வந்த தாய் விபத்தில் சாவு! – யாழ்ப்பாணத்தில் இன்று துயரம்.
மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், மூளாய் பகுதியைச் சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் அர்ச்சனைப் பொருட்களுடன் இன்று வந்துள்ளனர்.
எதிர்த்திசையில் வந்த கழிவகற்றும் வாகனத்தை முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் நிலைகுலைந்தது, வீதியில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் வாழ்ந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் வீழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த மகள் வீதியின் மறுபக்கம் வீழ்ந்துள்ளனர்.

அதன்போது, வீதியின் எதிர்த்திசையில் வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் பொலிஸார், கழிவகற்றும் வாகனத்தின் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
