கண்மணியே பேசு…

கண்மணியே பேசு…

 பாகம்  நான்கு

-கோதை

 

“லா லலல லலல லலல லலல லாலா..   லா லலல  லா லா…

ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும், இன்பம் புது வெள்ளம்… அந்தச் சுகம்… இன்ப சுகம்…அந்த மனம் எந்தன் வசம்… ஜீவன் ஆனது…, இசை நாதம் என்பது… முடிவில்லாதது, வாழும் நாள் எல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது…”

 அவள் இசையுடன் கலந்து, உருகினாள்.

பணத்திற்காக இல்லாமல், மற்றவர்களுக்கும் இசையின் புனிதம் புரியவேண்டும் என்ற நினைவோடு இருப்பவளுக்கு, இயல்பாகவே வந்த இசையில் எந்தப் பிசிறும் இல்லாமல் பாடப் பாட பல்வேறு காட்சிகளும், கனவுகளும் மனதை ரம்மியமாக ஆக்கிரமித்தன.  

அவளுக்குத்  தான் ஒரு விசேட அரங்கில் பாடிக்கொண்டிருக்கிறோம்,  தன் முன்னே நூற்றுக் கணக்கானவர்கள் தன் இசையில் லயித்திருக்கிறார்கள் என்ற பிரக்ஞனை எதுவுமின்றிப் போனது. 

பாடல் முடிந்த போது கை தட்டலில் அரங்கே அதிர்ந்து போன போதுதான் அவள் சுய நினைவுக்குத் திரும்பினாள். 

தன் கதிரையில் வந்தமர்ந்த போது தான் அவள் பழைய தோழி ஒருத்தி அவளுக்காக அங்கே காத்திருந்தது அவளை இதமான,  இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“ஹேய் பள்ளிக்கூடத்தில பார்த்தது, எத்தினை வருஷங்கள் ஓடிப் போச்சுதடி?”

“இப்பிடி பாடி அசத்துவாய் எண்டு நான் நினைக்கவேயில்லை!  என்ன ஒரு அருமையான குரல்? எவ்வளவு காலமாய் இப்பிடி பாடிக் கொண்டிருக்கிறாய்?”  தோழியின் குரலில் அவளைப் பார்த்த மகிழ்ச்சி மாத்திரமின்றி அவள் பாடியதைக் கேட்ட மகிழ்ச்சியும் சேர்ந்தே பிரதிபலித்தது.

“உன்னைக் கண்டது எவ்வளவு சந்தோசமாய் இருக்கடி, ….”

நான் நல்லாய் இருக்கிறன், நீ எப்பிடி இருக்கிறாய்?”

ஒருமையில் அழைத்துப் பழகும் அளவுக்கு மிக அந்நியோன்னியமாய் அவர்கள் பாடசாலை நாட்களில் பழகியிருந்தார்கள்.

“நான் நல்லாயிருக்கிறனடி,  எவ்வளவோ காலமாய் உன்னைத் தேடி அலைஞ்சிருக்கிறன். சரி சரி அதை விடு, இப்பவாவது ஆளை ஆள் கண்டுபிடிச்சமே அதைச் சொல்லு!”

அவள் தோழி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

தோழியின் அன்பு அணைப்பில் கிறங்கியவளின் கண்களில் திடீரென ஒரு மின்சாரம் தாக்கியது போல ஒரு உணர்வு. அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் தன் கண்கள் போன திசையில் பார்த்த பொழுது, அந்தப் பெரிய அரங்கின் ஒரு மூலையில் இருந்தபடியே, அவளை இரண்டு தடவைகள் வழியில் பார்த்து நேரம் கேட்ட கோபுரம்  அவளிருக்கும் வழி  மேல் விழி வைத்து அவளையே  பார்த்துக் கொண்டிருந்தது.

“என்னடி என்னைப் பார்த்த அதிர்ச்சியில அப்பிடியே நிண்டிட்டாய் போல, கனக்க அதிர்ச்சியடைய வேண்டாம், இனி அடிக்கடி சந்திக்கலாம் தானே?”

அவள் தோழி கிண்டலுடன் தொலைபேசி இலக்கங்களைக் கொடுக்க, அதை வாங்க முடியாதவளாய் தோழியின் காதிற்குள் மெதுவாகத்  தன் கண் போன திசையில் பார்க்கும் படி சைகை செய்தாள்.

“சரி சரி பார்க்கிறன், பார்க்கிறன்!”

“யாரடி இவன், என்ர நிலைமை தெரியாமல் என்னையே பார்த்துக்கொண்டு?”

“உனக்கு நடந்ததெல்லாம் கேள்விப்பட்டனான், உனக்கு சின்ன வயசிலேயே அப்பாவும் இல்லாமல்ப் போய் இப்ப கட்டின புருசனும் இல்லாத நிலைமை. கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? ஆனால் இப்பிடியே இருந்து நொந்து போகாதை.” என சொல்லியவாறே அவள் சொல்லிய பக்கத்துக்கு கண்களை மேய விட்டவள் சிறிது ஆச்சர்யத்துடன் மீண்டும் அவள் பக்கமே திரும்பினாள்.

“வெள்ளை சேட்டோட வெள்ளை வெளேரெண்டு இருக்கிறவரோ? அவரைத் தெரியாதே உனக்கு? அருமையான ஒருத்தர். அவரும் உன்னைப் போல சங்கீத உலகத்தில தான் இருக்கிறார். பாவம் அவருக்கும் ஏதோ பிரச்னை எண்டு கேள்விப் பட்டனான்.”

மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாமல் தோழியின் கணவரும் மகனும் அவளைத் தேடி வந்துவிட அவள், அவர்களை அறிமுகம் செய்து வைத்து விட்டு, அவள் ஆருயிர்த் தோழி கிளம்பி விட்டாள்.

“நேரம் உள்ள போது டெலிஃபோன்  பண்ணடி, கதைக்கலாம்.” என்றபடி புறப்பட, கண்மணிக்கு என்னவோ போலாகி விட்டது.

நல்ல காலம் அவனை அநியாயத்துக்குக் கெட்டவனாக எண்ணவில்லை எனச் சமாதானம் சொல்லிக் கொண்டாள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என எண்ணியவளிடமிருந்து பெரு மூச்சொன்று வெளியேறியது.

மகன் தன்னை பார்த்துக்கொண்டிருப்பான் என்ற எண்ணம் மேலோங்க, தான் வந்த அலுவல் முடிந்த திருப்தியில் அவள் அந்த விசேட வீட்டில் சாப்பிடக்கூட இல்லாமல் வீட்டிற்குப் போகப் புறப்பட்டாள்.

நல்ல வேளையாகக்  காரை இந்த மண்டபத்தின் அருகிலேயே நிற்பாட்டும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது என மனசுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டே மண்டப வாயிலை நெருங்குகையில் அவன் அவளைக் கடந்து சென்று, பின் திரும்பி நின்றான்.

“மன்னிச்சு கொள்ளுங்கோ, கதைக்க முடியேல்ல, ஒரே சத்தமாக இருக்கு. உங்கட பாட்டும்  குரலும் அருமை!”

நிதானமாகத் தன் பெயர் அட்டையை மிக மரியாதையோடு இவள் கைகளில் திணிக்காத குறையாகக் கொடுத்து ஒரு புன்னகையுடன் விலகி நடந்தவனை, கண்மணி சங்கடத்துடன் பார்த்து, செய்வதறியாது  புன்னகைத்தாள்.

சுகங்களும்...சோகங்களும்...: August 2015

கண்மணியும் இனி புன்னகைப்பாள்…

Leave A Reply

Your email address will not be published.