ராஜபக்ஷக்களின் நிதியை ஏன் இன்னும் மீட்கவில்லை? – இப்படி அநுர அரசிடம் நாமல் எம்.பி. கேள்வி.
“உகண்டாவில் ராஜபக்ஷக்களால் பதுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட டொலரை அநுர அரசாங்கம் ஏன் இன்னமும் மீட்கவில்லை?” – என்று மொட்டுக் கட்சியின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தினர், ராஜபக்ஷக்களின் நிதி உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளது என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். ஆனால், இதுவரை அந்த நிதியை மீட்கவில்லை.
அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட நிதியை மீட்பதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம். அந்த டொலரை மீட்பதற்குப் பொருத்தமான காலமாகவும் இக்காலமே அமைந்துள்ளது. இதற்காக சத்தியக் கடதாசிகளை வழங்கவும் தயாராக உள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அந்த இரு கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், நாட்டின் ஜனநாயகம் பேணப்படுவதற்கு இந்த இணைவு அவசியமானது. இணைந்து செயற்பட வேண்டிய இடங்களில் எதிரணியாக நாமும் இணைந்து செயற்படுவோம்.” – என்றார்.
