நிபந்தனைகள் மீறப்பட்டால் அலைவரிசை உரிமம் இரத்து! – தொலைக்காட்சிகளுக்கு ஊடகத்துறை அமைச்சர் சிவப்பு எச்சரிக்கை.
தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சால் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளன என்றும், அந்த நிபந்தனைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு இருக்கின்றது என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌக்கிய அண்டஹெர – 2025” கௌரவிப்பு விழா, அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் தற்காலிக அனுமதிப்பத்திரமாகவே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
