தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: களத்தில் நயினாதீவு விகாராதிபதி – இன்று யாழ். மாவட்ட செயலரைச் சந்தித்தார்.
நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார்.
மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலரிடம் தெரிவித்தார்.
“தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழ விகாரைக்கு என அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை. அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியைத் தவிர ஏனைய காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும். திஸ்ஸ விகாரைக்கு எனச் சொந்தமாகக் காணிகள் உள்ளன. அந்தக் காணிகள் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. எனவே, தற்போதுள்ள திஸ்ஸ விகாரையை என்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைத்த 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்குத் எனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரைக் காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்கத் தயார்.” – என்று நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
