தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது அநுர அரசு! – சபையில் சஜித் குற்றச்சாட்டு.

“டித்வா சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிக்கத் தீர்மானித்திருக்கிறது. இதன் மூலம் அரசு
மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிராந்தியத்தில் மிகக்குறைந்த மின்சார கட்டணங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு, எண்ணெய் சார்ந்த மின் உற்பத்திக்குப் பதிலாக குறைந்த விலை கொண்ட சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களை நோக்கித் திரும்புதல், சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்கும் முகமாக தமது கொள்கையையும் வடிவமைத்துள்ள தற்போதைய அரசு, ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுள்ளது.

மக்கள் அபிலாஷைகளைக் கிடப்பில் போட்டு எடுத்து வரும் நடவடிக்கைகள் தெளிவாகத் தெரிவதனால், விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அரசிடம் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றேன்.

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இலங்கை மின்சார சபையின் இழப்புகளை ஈடுகட்டும் நோக்கிலா?

இவ்வாறு மின்சார கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள், சிறிய தொழில்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசு மதிப்பீடு செய்துள்ளனவா? அவற்றைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆகக் குறைப்பதற்கும், மின்சாரக் கட்டணங்களை அறவிடும் ஒழுங்கை வெளிப்படையான முறைமையொன்றுக்குக் கொண்டு வருவதற்கும் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறிவிட்டமைக்கான காரணங்கள் யாது? இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை அரசு ஏன் புறக்கணித்து வருகின்றது?

அரசால் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய வலுச்சக்தி கொள்கைக்குப் பொதுமக்களின் ஆலோசனைகளைக் கோர விடுத்திருக்கும் காலம் நியாயமானது என்று அரசு கருதுகின்றதா?

முழுநாடும் ஒரு பேரழிவை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்தக் காலத்தை நீடிக்க வேண்டுமல்லவா?

புதிய கொள்கை தொடர்பில் தொழில்நுட்ப, நிதி மற்றும் பொருளாதார ரீதியிலான பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா? அவற்றைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

புதிய வலுச்சக்திக் கொள்கையின் கீழ் தற்போதைய குறுக்கு மானியத்தை நீக்குவதற்கு அரசு தயாராகி வருகின்றதா? ஆமெனில், இதனால் ஒவ்வொரு துறைக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? அவற்றைச் சபையில் சமர்ப்பிக்க
முடியுமா?

குறுக்கு மானியங்களை நீக்குவதாக இருந்தால், அது குறித்த ஒப்பீட்டு ரீதியிலான அறிக்கையொன்றை இந்தச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா? புதிய வலுச்சக்திக் கொள்கையின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான பணம் செலுத்தும் வழிமுறைகளில் பயன்பாட்டு நேரத்தின் அடிப்படையில் மாற்றத்தைக் கொண்டு வர
எதிர்பார்க்கிறீர்களா? ஆமெனில் அது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? அதனைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

இந்தக் கொள்கையின் மூலம் காற்றாலை, சிறிய நீர் மின்சாரம் உற்பத்தி நிலையம் மற்றும் உயிரி மீள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கான அறவீட்டு முறையை மாற்றியமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதா?

இந்த மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை
தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில் ஏதேனும் வெட்டுக்களைச் செய்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றதா? அது எந்த விதத்தில்? இங்கு சட்டபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இழப்பீடு
வழங்கப்படுமா?

அத்துடன் மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் என்று கூறிய அரசு இன்று எரிபொருள்களின் விலையைக்கூட அதிகரித்துள்ளது.

திறைசேரி விதிக்கும் வரிகளை நீக்கி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளைப் பெற்றுத் தருவோம் என்று கூறிய அரசு, இன்று மீண்டும் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் கைதியாக மாறியுள்ளது. டித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், இன்று மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. ஒருபுறம், எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டு மறுபுறம் தேர்தல் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசு மீறிவிட்டது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.