பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி நீக்கப்படார்! கல்வி அமைச்சுப் பதவியும் பறிக்கப்படமாட்டாது!! – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்.
“பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை. அந்தப் பதவியில் அவர் தொடர்வார். அத்துடன், அவரிடம் இருந்து கல்வி அமைச்சும் பறிக்கப்படமாட்டாது.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த விஜித ஹேரத்,
“கல்வி மறுசீரமைப்பு என்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் பிழை இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.
எனினும், குறுகிய நோக்கில் இந்த விடயம் தொடர்பில் அரசியல் நடத்தப்படுகின்றது.
பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார்.
கல்வி மறுசீரமைப்பு என்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செய்வோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது.” – என்றார்.
