யாழில் வீதியில் நடந்து திரிந்த ஜனாதிபதிக்கு எம்மைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லையா? – ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.
யாழ்ப்பாணம் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “யாழ். வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வீதியில் சுதந்திரமாக நடந்து திரிந்தார்.ஆனால், வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கியுள்ள எங்களைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லையா?” என்று போராட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய ஆளுநரான நா.வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ். மாவட்ட செயலராகக் கடமையாற்றிய காலத்தில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்றுவரை வழங்கப்படவில்லை

இதனால் அந்தக் காலப் பகுதியில் வீட்டுத் திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில், மழைக் காலங்களில் இருக்க இடம் இல்லாமல் அல்லல்படும் நிலைமை பல வருடங்களாகத் தொடர்கின்றன.
தற்போதைய அரசு பாரபட்சமற்ற அரசு எனக் கூறி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த ஆட்சியாளர்களிடம் பெற்ற வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சியில் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகின்றார்கள்.
இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையைத் தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகின்றது.
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வீதியில் சுதந்திரமாக நடந்து திரிந்தார். ஆனால், யாழ். மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கியுள்ள எங்களைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே, எமது பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம். எமது பிரச்சினையை விரைந்து தீர்க்காவிடின் எமது போராட்டம் தொடரும்.” – என்றனர்.
