கலைக்கு உயிர் புகுத்தும் இளம் தலைமுறையினர்! – பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் வடக்கு ஆளுநர் பாராட்டு.
தமிழரின் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களில் பரதநாட்டியம் முதன்மையானது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் தரம் 11 மாணவியுமான செல்வி லக்ஸ்மிகா திஸாகரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு, நேற்று சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) கா.சந்திரபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி பயிலும் செல்வி லக்ஸ்மிகா திஸாகரனின் குடும்பப் பின்னணியை நான் நன்கறிவேன். கலைகளின் பால் ஈர்க்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த இவர், தனது கல்வியுடன் இணைந்ததாக, கடுமையான அர்ப்பணிப்புடன் இக்கலையை முறையாகப் பயின்று இன்று அரங்கேற்றம் செய்வது பாராட்டத்தக்கது.
இவரது குரு திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் மிகச் சிறந்த கலைஞர். அவரது நடன நிகழ்வுகள் எப்போதும் தரம் வாய்ந்தவை. அவரது தந்தையாரும் சிறந்ததொரு நிர்வாகி. அத்தகைய குருவிடம் பயின்ற மாணவியான லக்ஸ்மிகாவின் ஆற்றுகை, இன்று ஒரு ‘அரங்கேற்றம்’ என்பதைத் தாண்டி, முதிர்ச்சியானதொரு கலைஞரின் ஆற்றுகையைப் போன்று பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது ‘ஆனந்த தாண்டவமும்’, சீற்றத்துடன் இருக்கும்போது ‘ருத்ர தாண்டவமும்’ ஆடுவார் எனப் புராணங்கள் கூறுகின்றன. அந்தச் சிவனை மையப்படுத்திய அவரின் நடன வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பரதநாட்டியக் கலையும் அமைந்திருக்கின்றது. அத்தகைய தெய்வீகக் கலையை எமது பிள்ளைகள் தொடர்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
இலங்கையில் பரதநாட்டியத்தைப் பயிலும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை விரிவுபடுத்தும் வகையில், மகரகம தேசிய கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘பரதநாட்டியம்’ எனும் வாசிப்புத் துணைநூல் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மாணவர்கள் இந்நூலில் உள்ள விடயங்களைத் தமதாக்கிக் கொண்டு, இத்துறையில் இன்னும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.” – என்றார்.
இந்நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி சாந்தினி சிவனேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், மதகுருமார்கள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




