4 ஆம் கட்டத்தினையடுத்து எச்சரிக்கை மிக்க பல விடயங்கள் உள்ளது. சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

பாரிய விளைவுகள் ஏற்படலாம்! யாரும் மறந்துவிடக் கூடாது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், கொரோனா பரவல் ஸ்ரீலங்காவில் மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

இந்தக் கட்டமானது நான்காம் அலை வரை பரிமாணம் பெற்றால் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக வீடுகளில் உயிரிழந்தவர்கள் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பேசிய அவர்,

அண்மையில் சில முதியவர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளிலேயே உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தில் வந்து நடமாடவில்லை. அவ்வாறெனில் அவர்களது வீடுகளிலுள்ளவர்களாலேயே முதியோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.

எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அலுவலகங்களுக்கு தொழிலுக்குச் செல்பவர்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் மாத்திரமின்றி அலுவலக நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
தற்போது வைரஸ் பரவல் வேகம் அதிகம் என்பதால் 1 தொடக்கம் 2 மீற்றர் வரை இடைவெளியை பேண வேண்டியது அவசியமாகும்.

கொரோனா வைரஸ் பரவலில் ஸ்ரீலங்கா மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்பதை தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதை யாரும் மறந்துவிடக் கூடாது. 4ஆம் கட்டத்திற்கு சென்று விட்டால் அது மிகவும் அபாயமானதாகும். 4 ஆம் கட்டத்தினையடுத்து எச்சரிக்கை மிக்க பல விடயங்கள் உள்ளது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் தற்போதும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே உள்ளது என்பதால் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதே சிறந்தது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.