யாழ். மருதனார்மடம் சந்தைக்குள் துப்பாக்கியுடன் உலாவிய நபர் கைது! – அது போலித் துப்பாக்கி எனப் பொலிஸார் தகவல்.
யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி என்றும், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-
இன்று செவ்வாய்க்கிழமை மருதனார்மடம் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தலைக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருந்ததோடு, கையில் ஒரு பையையும் வைத்திருந்தார்.
அங்குள்ள வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாய் கொள்வனவு செய்த அந்த நபர், “சந்தைக்குள் வட்டிக்குப் பணம் வழங்குபவர்கள் யார்?” என வினவியுள்ளார். வியாபாரி தனக்குத் தெரியாது எனப் பதிலளித்ததும் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அந்த நபரின் பையினுள் ரி – 56 ரக துப்பாக்கி போன்ற ஒன்று காணப்பட்டதாலும், இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி போன்ற ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாலும் அச்சமடைந்த வியாபாரிகள் உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கண்காணிப்புக் கமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியைச் சோதனை செய்தபோது அது உண்மையான துப்பாக்கி அல்ல என்பதும், போலித் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதமையும் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
