பாகிஸ்தான் ISI-ன் பயங்கர சதி முறியடிப்பு: தமிழகத்தில் 6 பேர் உட்பட 8 பயங்கரவாதிகள் அதிரடி கைது!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவின் பேரில் தில்லியில் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த வங்கதேசத்தவா் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவா்களில் 6 போ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவா்கள். அவா்கள் விசாரணைக்காக தில்லிக்கு அழைத்து வரப்படுவாா்கள். அவா்களில் சிலா் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள். இதே வழக்கில் தொடா்புடைய பின்தொடா்தல் நடவடிக்கையின் போது 2 போ் முன்பு கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கா் -ஏ- தொய்பா இந்தியாவின் முக்கிய மதவழிபாட்டுத் தலங்கள் அதன் இலக்கு பட்டியலில் வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியது. இதைத் தொடா்ந்து தில்லி செங்கோட்டைக்கு அருகே வெடிப்பு ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு அமைப்புகள் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் உளவுத்துறை தகவல்களைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனைகளின் போது, அவா்களிடம் இருந்து 12-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மற்றும் சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடையவா்களுடன் இந்தக் குழு தொடா்பு கொண்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் மத்திய முகமைகள் உதவுகின்றன.

கடந்த நவம்பா் 10, 2025 ஆம் தேதி தில்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த காா் வெடிப்பில் குறைந்தது 13 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 20 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1- க்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றப்பட்ட காா் வெடித்ததில், அருகிலுள்ள பல வாகனங்கள் தீப்பிடித்து, அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.