மாவோயிஸ்ட்களின் மனதை மாற்றிய ‘இரும்புப் பெண்மணி’: ஐ.ஜி. சுமதியின் அதிரடி சாதனை!
ஹைதராபாத்: தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.
மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சரணடையும் தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தெலங்கானாவில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோயிஸ்ட் கமாண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தற்போதுள்ள நிலைமையை பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சரணடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்படி அறிவுரை கூறினார். இவரது தொலைநோக்கு மற்றும் பேச்சுவார்த்தை மாவோயிஸ்ட்களை சரணடைய சம்மதிக்க வைத்தது.
சுமதியின் தொடர் முயற்சியின் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் கமாண்டர்கள் உட்பட 591 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் கமாண்டராக இருந்த திப்பிரி திருப்பதி என்ற தேவுஜிக்கு போலீஸாரிடம் சரணடையும் திட்டம் எதுவும் இல்லை. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரணடைய சம்மதிக்க வைத்தார் ஐ.ஜி.சுமதி. இதையடுத்து தேவுஜி மற்றும் அவரது கூட்டாளிகள் மால்லா ராஜி ரெட்டி மற்றும் இரண்டு மூத்த உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.
