உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மைத்திரி, ரணில் உட்பட 12 பேருக்கு எதிராக உடனடி விசேட விசாரணை! – சட்டமா அதிபர் திணைக்களம் அதிரடி உத்தரவு.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ஆகியோரின் கையொப்பத்துடன் இதற்கான விசேட கடிதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆழமாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணைப் வளையத்துக்குள் வரும் முக்கியஸ்தர்கள்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கடமை தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளவர்களில் முக்கியமானவர்கள்:

அரசியல் தலைவர்கள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பாதுகாப்பு உயர் அதிகாரிகள்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர.

பொலிஸ் அதிகாரிகள்: சிசிர மெண்டிஸ், நிலந்த ஜெயவர்தன, நந்தன முனசிங்க, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னக்கோன், வசந்த விக்கிரமசிங்க, பி.எல். பெரேரா மற்றும் ஏ.எஸ். லத்தீப்.

குறித்த கடிதத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்ற அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறியமை மற்றும் கடமை உதாசீனம் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.