இலங்கையின் உற்ற நண்பனை இழந்தோம்! – ஈரான் முன்னாள் ஜனாதிபதி மறைவுக்கு நாமல் கவலை.

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார் எனக் கூறப்படும் செய்தி கேட்டு தான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நாமல் ராஜபக்ஷ இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அஹ்மதிநெஜாட், நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தோள் கொடுத்தமையை நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் மின்சக்தி மற்றும் விவசாயத் துறைக்கு வலுசேர்க்கும் உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குவதில் அஹ்மதிநெஜாட் முக்கிய பங்கு வகித்தார் என்று நாமல் தெரிவித்துள்ளார்.

“ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான மற்றும் நெருக்கமான நண்பனாக இருந்து வருகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ஷ, இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தார் எனக் கூறப்படும் அஹ்மதிநெஜாட்டின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களிடமிருந்து வரும் முதல் இரங்கல் செய்தி இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.