எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது! – சபையில் ஜனாதிபதி உறுதி.

இலங்கையில் எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தீர்ப்பதற்கான அரசின் பொறிமுறைகள் குறித்து அவர் சபையில் விரிவான விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:-

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு, திடீரென அதிகரித்துள்ள தேவையே முக்கிய காரணமாகும். குறிப்பாக, ‘மஞ்சள் நிற’ சிலிண்டர்களைப் பயன்படுத்துவோர் ‘நீல நிற’ லிட்ரோ சிலிண்டர்களுக்கு மாற முற்பட்டதால் ஏற்பட்ட மேலதிக தேவையே இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையின் மொத்த எரிவாயு களஞ்சியப்படுத்தும் திறன் 8,000 மெட்ரிக் டன்களாகும். லிட்ரோ நிறுவனத்துக்கு மாத்திரம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மெட்ரிக் டன் எரிவாயு தேவைப்படுகின்றது.

தற்போதைய களஞ்சிய வசதிகளின்படி, இருப்பு ஒரு வாரத்துக்கு மாத்திரமே போதுமானது.

நாளாந்தத் தேவை 1,800 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் பட்சத்தில், கையிருப்பு 5 நாட்களிலேயே தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது.

இந்தக் களஞ்சியப்படுத்தும் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போது பெரிய கப்பல்கள் மாலைதீவில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலமே தலா 8,000 மெட்ரிக் டன் எரிவாயு இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறான கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து சேர்கின்றன. இருப்புகள் தீரும் வரை காத்திருக்காமல், தொடர்ச்சியாக இறக்குமதி செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, லிட்ரோ நிறுவனம் 100,000 புதிய சிலிண்டர்களுக்கு ஓடர் வழங்கியுள்ளது. இவற்றை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் அரசு முழுமையான தயார் நிலையில் இருக்கின்றது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.