உத்தர பிரதேசத்தில் கொடூரம்: பெண் விவசாய சங்கத் தலைவி படுகொலை – காட்டில் எலும்புக்கூடாக மீட்பு!
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சல் மிஸ்ரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவராக இருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அஞ்சல் மிஸ்ரா திடீரென காணாமல் போனார்.
அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள காகர்தாரி வனப்பகுதியில் மார்ச் 3 அன்று பெண்ணின் உடல் பாகங்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அது அஞ்சல் மிஸ்ராவின் உடல் என்று உறுதி செய்யப்பட்டது.
அவரது செல்போன் கடைசியாக அந்த காட்டுப் பகுதியில் செயலில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
அங்கு தேடியபோது மண்டை ஓடு, தாடை எலும்பு உள்ளிட்ட சில உடல் பாகங்கள் கிடைத்தன. அருகில் உடைகள் மற்றும் காலணிகளும் இருந்தன.
அவரது கணவர் சந்தேக நபராக கைகாட்டிய சூரஜ் வர்மா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அஞ்சல் மிஸ்ராவை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக இருவரும் முறையற்ற உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததால் சூரஜ் வர்மா ஆத்திரத்தில் அஞ்சல் மிஸ்ராவை காட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை மறைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சூரஜ் வர்மா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
