வாகனம் மோதி 7 வயது மாணவன் பரிதாப மரணம்! – கண்டியில் சோகம்.
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தனது வாகனத்தை பாடசாலை வளாகத்தில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இதன்போது, வாகனத்தின் கைத்தடைப் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.
அவ்வேளையில், பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை முறையாக நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற பின்னரே, எதிர்பாராத விதமாக இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்து இடம்பெற்றது என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
