அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை: கொழும்பு சி.ஐ.டி. வசம் விசாரணை! – ஊர்காவற்றுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடமிருந்து நீக்கி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த போது, வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அயூப்ராஜ் அருள்பாயஸ் என்ற 17 வயது சிறுவன் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
“விசாரணையில் திருப்தியில்லை”
என்று சட்டத்தரணிகள் வாதம்
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளில் தமக்குத் திருப்தி இல்லை என்று சுட்டிக்காட்டினர். எனவே, பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த இதனை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பொலிஸாரின்
ஆட்சேபனையும்
நீதிமன்றத் தீர்ப்பும்
சட்டத்தரணிகளின் கோரிக்கைக்குப் பொலிஸ் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் என 20 இற்கும் மேற்பட்டோர் நீதிமன்றில் சமூகமளித்திருந்தனர். எனினும், இருதரப்பு வாதப் பிரதிவாதங்களை அடுத்து, நீதிவான் விசாரணைகளை கொழும்பு சி.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
புதிய சர்ச்சையை ஏற்படுத்திய
மீட்கப்பட்ட வெற்றுக்கோது
விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், “சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரால் மீட்கப்படாத வெற்றுக்கோது, ஒரு மாதத்தின் பின்னர் தற்போது மீட்கப்பட்டதாகக் கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று வாதிட்டனர்.
இதுவரை கைதுகள்
இடம்பெறவில்லை
துப்பாக்கிச்சூடு இடம்பெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள போதிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கை பொறுப்பேற்பதன் மூலம் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

