நெருக்கடியைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க எதிரணி கங்கணம்! – அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக ஒருபோதும் ஒன்றிணையாத எதிர்க்கட்சிகள், உலகளாவிய நெருக்கடிகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளவே தற்போது ஒன்றிணைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-

“சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்று எவராலும் கூற முடியாது. எனவே, இப்போதிருந்தே வலுசக்தி பயன்பாட்டை வரையறைகளுடன் முன்னெடுப்பதே புத்திசாலித்தனமானது. அதைவிடுத்து அன்றாட சேவைகளை முடக்குவது தீர்வாகாது. மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் கொள்வனவு வழமையை விட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறான அநாவசிய சேமிப்புகளைக் குறைத்து, வழமையான பயன்பாட்டைத் தொடர்ந்தால் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். பொதுச் சேவைகளைக் கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில்லை. டித்வா புயல் பாதிப்பின் போதோ அல்லது தற்போதைய உலகளாவிய போர் நெருக்கடியின் போதோ அவர்கள் தீர்வுகள் குறித்து சிந்திக்கவில்லை. மாறாக, இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசாங்கத்தை எப்படி வீழ்த்தலாம் என்பதற்காகவே அவர்கள் கைக்கோர்த்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பிறகு, ஆசனங்களைக் கைப்பற்றி அதிகாரத்தைப் பிடிக்கவே அவர்கள் திட்டமிடுகின்றனர். பொருளாதார மேம்பாடு அல்லது நாட்டின் அபிவிருத்தி குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. நெருக்கடி நேரங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற குறுக்கு வழியைத் தேடுவதே அவர்களின் நோக்கம்.

எது எவ்வாறிருப்பினும், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதிலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அரசியல் இலாபம் தேடுவதைக் கைவிட்டு, இந்த நெருக்கடி காலத்தில் நாட்டுக்காக இணைந்து செயற்படுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.