மாகாண சபைத் தேர்தலை நடத்த நிதி ஒரு தடையல்ல நாடாளுமன்றக் குழு அறிக்கையை தாமதமின்றிச் சமர்ப்பிக்க வேண்டும் – ரத்நாயக்க வலியுறுத்து.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகக் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழு அவதானம் செலுத்தி, தாமதமின்றித் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனநாயகத்தின் பிரதான அங்கமாகவே தேர்தல்கள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்பட்ட சட்டச் சிக்கல்களினால் பல ஆண்டுகளாகத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு தேர்தலை நடத்துவதற்குப் கடந்த அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தேர்தலை நடத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கு ஆணைக்குழுவின் சார்பில் நாம் பல ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று தற்போது இயங்கி வருகின்றது. இக்குழு தனது முதலாவது கூட்டத்தை நடத்தியதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த செயற்குழு தாமதமின்றித் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஒரு தெளிவான தீர்வு எட்டப்பட்டால், நியாயமானதும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எம்மால் முடியும்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஏனெனில், நடப்பு வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்காகத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.