பவுசருடன் மோதி அண்ணன், தங்கை பரிதாப உயிரிழப்பு – யாழில் பெரும் சோகம்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவர் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பவுசர் வாகனத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தின் வீரியம் காரணமாக இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு, கடுமையான காயங்களுக்கு உள்ளாகி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் உயிர்கள் விபத்தில் பறிபோயுள்ளமை மணியந்தோட்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த பொதுமக்களும் உறவினர்களும் கண்ணீர்மல்கக் கூடியிருந்தமை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குக் காரணமான பவுசர் வாகனச் சாரதி மற்றும் வாகனம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.