எரிபொருள் சிக்கனத்துக்கு ஜனாதிபதி கடும் உத்தரவு! – அமைச்சுகளிடம் உடனடி அறிக்கை கோரல்.
ஒவ்வொரு அமைச்சும் எரிபொருள் சிக்கனம் தொடர்பான நடைமுறைச் சாத்தியமான திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையை அறிக்கையாக உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவினருடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தடையின்றி முன்னெடுத்து, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதை உறுதி செய்வதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு.
துறைசார்ந்த எரிபொருள்
விநியோகத் திட்டங்கள்
விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
கைத்தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்க முன்னைய கியூ.ஆர். முறைமையைப் பேணுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கான எரிபொருள் வழங்கல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் போக்குவரத்துத் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாகக் கருதி, வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
விலைக் கட்டுப்பாடும்
பொருளாதார முகாமைத்துவமும்
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. சதொச உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் இறக்குமதியாளர்களுடன் இணைந்து நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், நிர்மாணத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் குறைந்தபட்ச எரிபொருள் நுகர்வுடன் இயல்பு வாழ்க்கையைத் தொடரத் தேவையான முழுமையான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், சுற்றுலா சபையின் தலைவர் மற்றும் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
