ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வைப் புறக்கணிப்போம் – முஸ்லிம் எம்.பி.க்களுக்கு நிசாம் காரியப்பர் அழைப்பு.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈரானின் சட்டபூர்வமான தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை எந்தவொரு கண்டனத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்கா மற்றும் மொஷாட் அமைப்பு இணைந்து முன்னெடுத்த இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறானதொரு இராஜதந்திர சூழலில், ஜனாதிபதியால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்றது. எனவே, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும்.” – என்று அவர் கேட்டுக்கொண்டார்.
