கதிர்காமம் பிரதான வீதியில் கோர விபத்து இரு இ.போ.ச. பஸ்கள் நேருக்கு நேர் மோதல் நால்வர் சாவு! 40 பேர் காயம்!!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் ‘துருசெவன’ சந்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமாகும்.
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், எதிரே வந்த மற்றொரு இ.போ.ச. பஸ்ஸும் பயங்கரமாக மோதிக்கொண்டன. விபத்தின் வீரியத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக உருக்குலைந்தன.
இவ்விபத்தில் சிக்கி நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் ஐவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
விபத்து இடம்பெற்றவுடன் பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை, அங்கிருந்த பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மீட்டனர். பஸ்கள் ஒன்றோடொன்று மோதி நசுங்கியிருந்ததால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
