சமநிலையான வெளியுறவுக் கொள்கையை இலங்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – சர்வதேச மாநாட்டில் நாமல் எம்.பி. வலியுறுத்து.
உலகளாவிய அதிகாரப் பகிர்வில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கை சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற ‘WION’ உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச உறவுகளின் புதிய பரிமாணங்கள் குறித்து அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்தியப் பெருங்கடலின்
மூலோபாய முக்கியத்துவம்
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இந்தியப் பெருங்கடல் திகழ்வதை அவர் தரவுகளுடன் விளக்கினார். உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியளவும் இப்பிராந்திய கடல் வழிகளையே பயன்படுத்துகின்றன. அத்துடன், டிஜிட்டல் தகவல் தொடர்புகளைத் தாங்கி நிற்கும் கடலடி கேபிள்களும் இப்பிராந்தியத்தின் ஊடாகவே செல்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் வகிபாகம்
குறித்த பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியா, இப்பிராந்தியத்தில் ஒரு நிலைப்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளதாக அவர் பாராட்டினார். கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய இணைப்பு மற்றும் ‘நீலப் பொருளாதாரம்’ ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகச் செயல்படுவதன் மூலம் இலங்கை பெரும் நன்மைகளைப் பெற முடியும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தொழில்நுட்பமும்
எதிர்கால சவால்களும்
எதிர்கால உலக அதிகாரத்தை செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளே தீர்மானிக்கும் என்று தெரிவித்த அவர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், பிராந்திய முதலீடுகளுடன் கூடிய ‘தெற்காசிய ஹைட்ரஜன் பாதை’ ஒன்றை உருவாக்குவது குறித்த ஆலோசனையையும் அவர் முன்வைத்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் அமைதி மற்றும் ஒத்துழைப்புமிக்க வலயாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமின்மை உலகளாவிய ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
