மாணவர்கள் மீதான பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை மாபெரும் கண்டனப் போராட்டம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, நாளை வியாழக்கிழமை விரிவுரைகளைப் புறக்கணித்து மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாகவே, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த மாணவர்கள் மூவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்ட மூன்று மாணவர்களும் நாளை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர்.
மாணவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை ஒடுக்கும் வகையில் இந்த விசாரணை அமைந்திருக்கின்றது என்று மாணவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
