சிக்கிமில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

சிக்கிமின் கேங்டாக் பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அதிகாலை 3.6 மற்றும் 2.7 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான நிலநடுக்கம் கேங்டாக்கிற்கு வடமேற்கே சுமார் 10.7 கி.மீ தொலைவில், 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. அதே வேளையில், மற்றொரு நிலநடுக்கம் அந்நகருக்கு மேற்கே 11.2 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இமயமலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், யாருக்கும் காயமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியப் புவித்தட்டும் ஆசியப் புவித்தட்டும் மோதுவதால் இமயமலைத் தொடரை ஒட்டிய பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.