தேசிய மக்கள் சக்தி எம்.பி. பைசல் பயணித்த வாகனம் கோர விபத்து! சிலாபத்தில் இன்று அதிகாலை சம்பவம் தூக்கக் கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த மோட்டார் வாகனம், இன்று திங்கட்கிழமை அதிகாலை சிலாபம் – காக்காப்பள்ளி பகுதியில் விபத்துக்குள்ளானது. எனினும், இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தனிப்பட்ட அலுவல் நிமித்தம் சென்றுவிட்டு, மீண்டும் மதுரங்குளியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் அவர் மட்டுமே வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.
அதிகாலையில் ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதி நின்றுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பயணத்தின் போது கடும் தூக்கம் ஏற்பட்டதால் அவர் ஏற்கனவே இரண்டு இடங்களில் வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் வாகனத்தைச் செலுத்திய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சுவரில் மோதியதில் மோட்டார் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்துச் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
