அநுர அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி போர்க்கொடி! – தரமற்ற நிலக்கரிக்கு எதிராகத் தொடர் கருத்தரங்கு நடத்த முடிவு.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கொழும்பு, நாராஹேன்பிட்டியவில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

தரமற்ற நிலக்கரி இறக்குமதியும்
பொருளாதார பாதிப்பும்

தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நாட்டின் மின் உற்பத்திக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

விலை ஏற்றத்திற்கு எதிரான
மக்கள் விழிப்புணர்வு

எவ்வித நியாயமான காரணமுமின்றி, ஏற்கனவே கையிருப்பில் இருந்த எரிபொருள் தொகுதிகளின் விலைகளை உயர்த்தியமை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

“மாலிமாவின் தரமற்ற நிலக்கரி”
கருத்தரங்குத் தொடர்

ஏற்கனவே அவிசாவளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட “மாலிமாவின் தரமற்ற நிலக்கரி” எனும் கருத்தரங்குத் தொடரை அடுத்தகட்டமாகப் பின்வரும் மாவட்டங்களில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை: எதிர்வரும் மே மாதம் ஆரம்பத்தில் நடத்த முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

கம்பஹா: மாத்தறையைத் தொடர்ந்து கம்பஹாவில் கருத்தரங்கு நடைபெறும்.

களுத்துறை: அதனைத் தொடர்ந்து களுத்துறையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, பாடலி சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகோரல, சாகல ரத்நாயக்க, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, பிரேமநாத் சி தொலவத்த, சுகீஸ்வர பண்டார, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, நிமல் லான்சா, சுதத் மஞ்சுள, காமிணி வலேபொட, ரஞ்சன் செனவிரத்ன, செனால் வெல்கம உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

நாளை விசேட ஊடக சந்திப்பு

இதேவேளை, மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாகக் கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நாளை புதன்கிழமை நடத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.