கொத்து, சோற்றுப் பொதி விலை மீண்டும் 20 ரூபாவால் அதிகரிப்பு.

“நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யப்படும் சோற்றுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டே, பிரதான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு பொதி சோறு, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் தற்போதைய விலையுடன் மேலதிகமாக 20 ரூபா வசூலிக்கப்படும்.

அதேவேளை, ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன. சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தமையைத் தொடர்ந்து, வடை, பற்றிஸ் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளை இவ்வாறு 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாகச் சங்கத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக ஏற்கனவே மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், உணவக உணவுகளின் இந்த விலை மாற்றம் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.