வீதியில் மரணித்து விழும் நோயாளர்கள்; செய்தி வெளியிட்டவர் கைது.

வீதியில் மரணித்து விழும் நோயாளர்கள் செய்தி வெளியிட்டவர் கைது

கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீதிகளில் பெருமளவான நபர்கள் இறந்து வீழ்வதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை வெளியிட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (14) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவ, ஹேனவெல, எகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், கணனி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வீதிகளில் கொரோனா நோயாளர்கள் இறந்து வீழ்வதாக தெரிவிக்கும் இடுகை மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டத்தின் கீழ் மற்றும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் மீது, பொய்யான செய்தியை பரப்பியதன் மூலம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை, மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உண்டாக்கியமை மற்றும் அமைதியற்ற நிலையை உருவாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், கணனி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான இடுகைகளை பகிர்ந்து வரும் மேலும் நால்வர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வரை, இலங்கையில் 53 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, அதில் ஒரு நபர் மாத்திரம் வீதியில் வைத்து மரணித்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு மரணித்தவர் ஒரு யாசகர் என்பதோடு, அவர் தங்குவதற்கு நிரந்தர இடம் இல்லாத ஒருவர் என்பதால், அவர் இருந்த இடத்திலேயே வீதியோரத்தில் மரணமடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வீதிகளில் கொரோனா தொற்றாளர்கள் பாரிய அளவில் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும், இவ்வாறான செய்திகளை வெளியிடுவோர், பகிருவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp, Viber, Imo Facebook போன்றவற்றிலிருந்து இவ்வாறான செய்திகள் கிடைக்கும் நிலையில், அவற்றை பகிருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.