உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திட்டமிட்ட பாரிய சதித்திட்டம் 2017 ஆம் ஆண்டு முதலே திட்டமிடப்பட்டது என்றும் சபையில் அமைச்சர் ஆனந்த விஜேபால அம்பலம்.
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலானது தனிப்பட்ட ஒரு நபரின் செயல் அல்ல. அது 2017ஆம் ஆண்டிலிருந்து மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட சதித்திட்டமாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“2018ஆம் ஆண்டு வவுணதீவில் இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீது சுமத்தி விசாரணைகளைத் திசைதிருப்பியுள்ளனர். அந்தச் சமயத்திலேயே முறையான விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால், சஹ்ரானின் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். சஹ்ரானைத் திட்டமிட்டுப் பாதுகாப்பதற்காகவே விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அறிந்திருந்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்கின்றார். முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க பிரதான சூத்திரதாரி குறித்து எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.
கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார், 704 விசாரணை அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார். இவ்வாறுதான் அவர் விசாரணைகளை திசை திருப்பினார்.
சட்டவிரோதமான முறையில் 704 அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே பிரதான சூத்திரதாரி தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பிரதான சூத்திரதாரியைத் தேட முடியாது. ஏனெனில் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பிய கோட்டபய ராஜபக்ஷவின் சகாதான் உதய கம்மன்பில,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைச் சஹ்ரான் தரப்பினர் நடத்தினாலும், அவர்களைப் பின்னணியிலிருந்து ஒரு தரப்பினர் வழிநடத்தியுள்ளமை சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றில் நாளாந்தம் விசாரணைகள் இடம்பெறுவதால், பல விடயங்களை இப்போதே பகிரங்கப்படுத்த முடியாது. எனினும், மிக விரைவில் முழுமையான உண்மைகள் வெளிவரும்.” – என்றார்.
