8-ஆம் வகுப்பு மாணவனின் துணிச்சல்: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கிய பெற்றோரை மீட்ட சாமர்த்தியம்!
இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடியில், இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.
இந்த மோசடியை தடுக்க, அரசு தரப்பில் இருந்து பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படியாக அரசின் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு பெற்ற சிறுவன் ஒருவர், தனது பெற்றோரை டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்த 55 வயதான சஞ்சய் சக்சேனா என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இவரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மோசடியாளர்கள் தங்களை NIA அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்கள் தொலைபேசி எண் பயங்கரவாதிகளுடனும், ரூ.300 கோடி மோசடியுடனும் தொடர்புடையது.
உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம். நீங்கள் இந்த கேமராவை விட்டு நகரக்கூடாது, சாப்பிடுவது, தூங்குவது என அனைத்து நடவடிக்கைகளும் கேமரா முன்பே நடக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், வீடியோ காலில் ஒரு போலியான கைது வாரண்டையும் காட்டி அவர்களைப் பயமுறுத்தியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சஞ்சய் சக்சேனாவும், அவரது மனைவியும் சுமார் 10 மணி நேரம் கேமரா முன்பு இருந்துள்ளனர்.
மேலும், வங்கி கணக்கு, நகைகள் உள்ளிட்ட தங்களுடைய சொத்து விவரங்களை மோசடியாளர்கள் கேட்டுள்ளனர்.
பெற்றோரை மீட்ட 8 ஆம் வகுப்பு மாணவன்
அதனை கவனித்த அவர்களது மகனான 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்மய் பெற்றோரிடம் போனை துண்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளான்.
ஆனால் பெற்றோர் தயங்கவே பிளைட் மோடில் வைக்குமாறும், அதனால் அழைப்பு துண்டிக்கப்படாது எனவும் கூறியுள்ளான்.
பெற்றோர் போனை பிளைட் மோடுக்கு மாற்றியதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் எந்த சட்டபூர்வமான நடவடிக்கையும் கிடையாது. யாராவது இதுபோல மிரட்டினால் உடனே காவல்துறையை அணுகுங்கள், வங்கி விபரங்களை யாருடனும் பகிராதீர்கள் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில், சஞ்சய் சக்சேனாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சிறுவன், “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பான செய்திகளை நாளிதழ்களில் வாசித்திருக்கிறேன். மேலும், இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து வெளியான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் படித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சாமர்த்தியமாக செயல்பட்டு பெற்றோரை மோசடியில் இருந்து மீட்ட சிறுவனை, கூடுதல் டிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து, காவல்துறையினர் பரிசுப்பொருள் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
