வளமான நாடு அமைய கைகோர்ப்போம் வாரீர்! தமிழ் – சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு.

நமது நாட்டின் உன்னதமான கலாசார விழுமியங்களுடன் ஒன்றிணைந்து, சவால்களை வெற்றிகொண்டு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பௌதீக மற்றும் ஆன்மீக மாற்றத்தை அடையாளப்படுத்தும் இந்தப் புத்தாண்டு, இலங்கையர்களின் பிரதான கலாசார விழாவாகும். ஒரே சுபநேரத்தில் பாரம்பரியச் சடங்குகளையும் சமயக் கிரியைகளையும் முன்னிலைப்படுத்தி நாம் கொண்டாடும் இந்தப் பண்பாட்டுப் பகிர்வு, எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் பலமான பிணைப்பை உலகிற்குப் பிரதிபலிக்கின்றது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையானது, எமது பெறுமதிமிக்க வரலாறு மற்றும் கலாசார மரபுரிமைகளுடன் இணைந்தே அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் இந்த விழுமியங்களின் அடிப்படையிலேயே பலமாக உருவாக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டுச் சடங்குகளின் மூலம் வெளிப்படும் கூட்டுப்பண்பு, பிறரையும் இயற்கையையும் கௌரவிக்கும் மனப்பாங்கு ஆகியவை அந்தச் சில நாள்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், வருடம் முழுதும் எமது நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும்.

கடந்த கால இயற்கை அனர்த்தங்களின் போது எமது மக்கள் காட்டிய மனவலிமை உலகுக்கு முன்னுதாரணமானது. தற்போது மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய வெளிப்புறச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்தருணத்தில், புத்தாண்டு காலத்தில் நாம் வெளிப்படுத்தும் ஒற்றுமை மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற பண்புகள் எமது வாழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.

கிடைத்த வெற்றிகளை அர்த்தமுள்ளதாக்கி, எழும் சவால்களுக்கு மத்தியில் தளராது முன்னேறி, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய ஆண்டாக அமையட்டும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.