24 மணிநேரத்தில் 520 பேர் சிக்கினர்! – போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸார் அதிரடி.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 179 கிராம் ஹெரோயின் மற்றும் 228 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் 6 பேருக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலரது சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வருமானம் ஈட்டும் முறைகள் குறித்துப் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் கண்டறியும் நோக்கில் இந்தச் சோதனைகள் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.