ஏழு ஆண்டுகள் கடந்தும் விடை தெரியாத துயரம்: நாடு தழுவிய ரீதியில் நாளை விசேட பிரார்த்தனை!

முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 8:47 மணிக்கு மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு, 8:50 மணிக்கு விசேட ஆராதனைகள் ஆரம்பமாகும்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நினைவேந்தல் நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வமதத் தலைவர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆயர்கள் தலைமையில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காலை 8:45 மணிக்கு நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படும்.

நாளை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை “நீதி மற்றும் உண்மை வேண்டி” மாபெரும் பிரார்த்தனைப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் நாளை அதிகாலை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன் தேவாலயங்களைச் சூழப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்ற கோரிக்கைக்கு மத்தியில் இம்முறை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.