வலஸ்முல்லையில் புத்தாண்டு விழா மோதல்: காயமடைந்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் சாவு!
அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை, போவல பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலஸ்முல்லைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்ட்டாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு விழா நிறைவடைந்த பின்னர், விழா நடைபெற்ற மைதானத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த சார்ஜன்ட்டின் சகோதரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்துக் கிடைத்த தகவலையடுத்து, தனது காரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சார்ஜன்ட், தனது சகோதரரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன்போது எதிர்த்தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய கடும் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான அவர் உடனடியாக வலஸ்முல்லை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அங்கிருந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்லை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
