உடல்நலம் விசாரித்த அனைவருக்கும் ரணில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு.
தனது அறுவைச் சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“எனது அறுவைச் சிகிச்சையின் போது எனது உடல்நலம் குறித்து விசாரித்து ஏராளமான குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. நான் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததை நான் அறிவேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றார். அவர் விரைவில் முழுமையான உடல்நலத்துடன் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வேண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் விசேட சமய வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
