சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் போதைப்பொருளுடன் தேரர்கள் கைது தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெருமளவு போதைப்பொருள்களுடன் தேரர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும், பலம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும் எனப் பிரித்துப் பார்க்கும் நிலை இனி இலங்கையில் இருக்காது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் உண்மைகள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. மஹா சங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று ஒருபுறம் ஒழுக்கவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், மறுபுறம் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு இணங்க எவ்வித பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், சட்டவிரோத செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். யாராவது சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்பட்டால், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

தற்போது நாடு முழுவதும் தேசிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே, கட்டுநாயக்கவில் 110 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழுமையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.