தையிட்டி விவகாரத்தில் அரசியல் செய்யத் தேவையில்லை விகாரைகளுக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி.

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் விகாரைத் தேவைகளுக்காக மக்களின் காணிகள் ஒருபோதும் சுவீகரிக்கப்படமாட்டாது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியாகத் தெரிவித்தார்.

காணி அளவீட்டுப் பணிகளின் போது ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

“நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

தையிட்டி விகாரையை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு இல்லை. ஆனால், சிலர் தமது அரசியல் இலாபத்துக்காகப் போலியான கருத்துக்களைப் பரப்பி, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

விகாரைக்காகக் காணிகளை அபகரிக்கும் நோக்கில் திஸ்ஸ விகாரைக் காணிகள் அளவீடு செய்யப்படவில்லை. மாறாக, காணிகளை விடுவித்து இந்தப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்.

தேவையற்ற குழப்பங்களை விளைவிக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல் தரப்பினரைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.