முதலாளிகளின் முகவர்களே எதிரணிகள்! – ஆளுங்கட்சி எம்.பி. விளாசல்.

“மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு ஆரம்பித்துள்ளது.” – என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“உலகத் தொழிலாளர் தினத்தை எதிரணிகள் மறந்துள்ளன. ஏனெனில் உலக முதலாளிகளின் முகவர்களாகவே அவை செயல்பட்டுவருகின்றன.

மலையக மக்களுக்குரிய உரிமைகள் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டன. காணி, வீடு மற்றும் சம்பள உரிமைகள் மறுக்கப்பட்டன. தலைமைகள் எனக் கூறிக்கொண்டோர் எமது மக்களை ஏமாற்றினர்.

எனினும், எமது ஆட்சியில் அதற்கு இடமில்லை. மலையக மக்களுக்கு காணி, வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். ஹட்டன் பிரகடனத்தில் இதற்குரிய உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போராட்டமின்றியே கடந்த முறை சம்பள உயர்வை நாம் பெற்றுக்கொடுத்தோம். எதிர்காலத்திலும் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
மலையக மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய காலப்பகுதியே இது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.