பேரிடர் கால எச்சரிக்கை சோதனை: இந்தியா முழுவதும் ‘பீப்’ சத்தத்துடன் வந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி!
புதுடெல்லி: இயற்கைப் பேரிடர் காலத்தில் செல்போன் மூலம் எச்சரிக்கை செய்யும் தகவல் அமைப்பை மத்திய அரசு நேற்று பரிசோதித்தது. இதனால் நாடு முழுவதும் செல்போன்களில் திடீரென ‘பீப்’ சத்தம் ஒலித்தது.
பேரிடர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அவசர காலத்தில் செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் தகவல் அமைப்பை (Cell Broadcast emergency alert system) மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இந்தத் தகவல் அமைப்பு நேற்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் ஒரு சோதனைச் செய்தியைப் பெற்றனர்.
‘அதிதீவிர எச்சரிக்கை’ என்று குறிப்பிடப்பட்ட அந்தச் செய்தியில், ‘புதிய உடனடி பேரிடர் எச்சரிக்கை சேவை’ செயல்படுத்தப்பட்டு இருப்பது பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இது ஒரு சோதனை மட்டுமே என்பதால் பதிலுக்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆதரவுடன், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, செல் பிராட்காஸ்ட் எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த அமைப்பு, இணைய வசதி அல்லது மொபைல் செயலி தேவையின்றி செயல்படுகிறது. வழக்கமான எஸ்எம்எஸ் எச்சரிக்கையை விட இது மேம்பட்டதாகும். உடனடியாக கவனத்தை ஈர்க்க கூடியதாகும்.
செல்போன்கள் ‘சைலன்ட்’ ஆக வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது தொந்தரவு செய்ய வேண்டாம் (do-not-disturb) என்ற உத்தரவு ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தாலும் ஒலியுடன் கூடிய எச்சரிக்கை தகவலை இது தரக்கூடியதாகும்.
