இந்தியக் கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு வருகை!
இந்தியக் கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கோடும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலும் இந்தியக் கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க அணிவகுப்பு மரியாதையுடன் மிகச் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டுத் திறனைத் தக்கவைப்பதற்கான எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் (Operational Turnaround) பூர்த்தி செய்யப்படவுள்ளன.
இக்கப்பலில் வருகை தந்துள்ள குழுவினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் சமூக நல்லுறவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இது இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கிடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான புரிதலை வளர்க்கவும் உதவும்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படையினர் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார மற்றும் தூதரக உறவுகளை மேலும் பலப்படுத்தும்.
இந்தியக் கடற்படையின் வலிமைமிக்க ‘சிந்துகோஷ்’ (Sindhughosh) வகுப்பைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல், தனது பயண இலக்குகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வரும் நாள்களில் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது.








