தவெக சட்டமன்றக் கட்சித் தலைவராக விஜய் தேர்வு: தமிழகத்தின் புதிய முதல்வராகிறார்!

வெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தவெக தயாராகி வருகிறது.

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று(மே 5) காலை பனையூரில் தவெக அலுவலகத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. முதல்வராக விஜய்யை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையடுத்து தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து விஜய் முதல்வராகிறார்.

தொடர்ந்து தவெக தரப்பில் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க ஆளுநரிடம் தவெக உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.